சிசுவைக் குதறிக்கொண்டிருக்கின்றன
பசித்த ஓநாய்க் கூட்டம்
பார்த்திருந்தும் ஏதும் செய்ய இயலாமல்
பதறும் தாயாய் நான் தவிக்கையில்
கழுதைப்புலி ஒன்று கண்ணில் வெறியோடு
எச்சில் வழிய என்னைத் திண்ண பாய்கிறது
எத்தனையோ போராடியும், எதிர்த்தும்
எதுவுமே பயனின்றி...என்னைத் தரையில் வீழ்த்தியது
கூரான பற்களால் கோரமாய் என் தேகம் கிழித்தது
ஒவ்வொரு அங்கமாய் ரசித்து ருசித்தது...
நான் வேட்டையாடப்பட்ட வேளையில்
என் சக மனிதர்கள்
திரை நாயகனின் கட் அவுட்டுக்கு
பாலாபிஷேகம் செய்துகொண்டிருந்தார்கள்....
மிருகம் கிழித்துப்போட்ட அங்கங்கள் சிதறியிருக்க
இதயம் மட்டும் கடிபடாமல்
தனியே துடித்துக்கொண்டிருந்தது
தலைமுடியை வைத்து முழு உருவம் படைக்கும்
ஏதோ ஒரு கலைஞன் இந்த வழி வரமாட்டானா
என் இதயத்துக்கு ஒரு உடல் கொடுக்க மாட்டானா...என்ற
எதிர்பார்ப்பில் இதயம் இன்னும் துடித்துக்கொண்டிருக்கிறது...!!!

No comments:
Post a Comment